தீவிரவாதிகள் ஊடுருவதைத் தடுக்க ஆப்கானிஸ்தான் உடனான எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பாகிஸ்தான் பலப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க கூறியுள்ளது.
வாஷிங்கடனில் நேற்று செய்தியாளர்களைகூட்டாகச் சந்தித்த அந்நாட்டின் பாதுகாப்புத் துறை செயலாளர் ராபர் கேட்ஸ், கப்பற்படைத் தளபதி மைக் முல்லென் ஆகியோர், எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துவதன் மூலம் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்க முடியும் என்றனர்.
பாகிஸ்தானின் எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதால் அவர்கள் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு பாதுகாப்பை அதிகரிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதிகள் அதிக அளவில் ஊடுருவதை உடனடியாக தடுக்க வேண்டும்.
தீவிரவாதிகள் பாகிஸ்தானை சொர்க்க பூமியாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அங்கு தங்கி தீவிரவாத சதிச்செயல்களை செய்ய திட்டமிடுகின்றனர் என்று தான் கடந்த வாரம் இஸ்லாமாபாத்துக்குச் சென்ற போது பாகிஸ்தான் தலைவர்களைச் சந்தித்து பேசியபோது தெரிவித்ததாக கப்பற்படை தளபதி முல்லென் தெரிவித்தார்.
எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று இந்த சந்திப்பின் போது எச்சரிக்கை விடுத்ததாக பாகிஸ்தான் நாளிதழ்களில் வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார்.
தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியை பலப்படுத்தி வருவதாக வந்த தகவல்களையும் பாதுகாப்புத் துறை செயலாளர் ராபர்ட் கேட்ஸ் மறுத்துள்ளார்.
ஆனால் எதிர்காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.