ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி உள்ளதா என்பது பற்றி அமெரிக்கா விசாரிக்கும் என அதிபர் புஷ் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் இருந்து சில தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு ஊடுருவுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது எனத் தெரிவித்த புஷ், இந்திய தூதரக தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக ஆப்கன் பிரதமர் ஹமித் கர்சாய் கூறிய குற்றச்சாட்டு பற்றி விசாரிக்கப்படும் என்றார்.
தீவிரவாதம் தங்களையும் (அமெரிக்கா), ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளையும் பாதிக்கிறது என்பதால், அனைவரும் இதனை எதிர்த்து போராட கடமைப்பட்டுள்ளதாகவும் புஷ் அப்போது குறிப்பிட்டார்.
கடந்த 7ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் அருகே தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 4 இந்தியர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.