ரஷ்யாவின் தெற்கு மாகாணமான செசன்யாவில் ராணுவ தளவாட வாகனத்தில் இருந்த வெடிபொருட்களை மற்றொரு வாகனத்துக்கு மாற்றிக்கொண்டிந்தபோது எதிர்பாராதவிதமாக வெடிபொருட்கள் திடீரென வெடித்ததில் 9 ராணுவத்தினர் பலியாயினர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
ஷாலி நகரத்தின் அருகே ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் ராணுவ வாகனத்தில் இருந்த வெடி பொருட்களை மற்றொரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தபோது இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் 7 ஆக இருந்த பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
இந்த வெடி விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இது பற்றி விரிவாக விசாரணை நடத்த தனி ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அனட்டோலி செர்டியுகோவ் தெரிவித்துள்ளார்.