பாகிஸ்தானில் மரண தண்டனைப் பெற்றவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவது தொடர்பான முடிவுக்கு பாகிஸ்தான் அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று அந்நாட்டு சட்டத்துறை தலைவர் மாலிக் முகமது கய்யாம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி பாகிஸ்தானின் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானில் மரண தண்டனை பெற்றவர்களது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பிடம் பரிந்துரை செய்துள்ளதாக பிரதமர் யூசுப் ரஸா கிலானி அறிவித்தார்.
இதில் அரசின் நிலை என்ன என்பதை விளக்க வேண்டும் என்று அந்நாட்டின் சட்டத்துறை தலைவர், உள்துறை, சட்டத் துறை அமைச்சர்களுக்கு தலைமை நீதிபதி ஜூலை 6ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்த சட்டத்துறை தலைவர், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி, சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் அயல்நாட்டு பயணம் மேற்கொண்டுள்ளதால் அவர்களிடம் ஆலோசனை செய்ய முடியவில்லை என்றும் இறுதி முடிவு எடுக்க இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் அந்நாட்டு உச்சநீதி மன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றும் இம்முடிவால் 7,000 மரண தண்டனை கைதிகள் பயன் பெறுவர் எனத் தெரிகிறது. பாகிஸ்தானில் மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியரான சரப்ஜித் சிங்கும் இதனால் உயிர் தப்புவார் என்பது குறிப்பிடத்தக்கது.