ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் அருகே சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் சவுத்ரி அகமது முக்தார் கூறியுள்ளார்.
இந்தியத் தூதரகம் மீதான தாக்குதலில் பாகிஸ்தானின் உளவுத்துறைக்கு தொடர்புள்ளதாக கூறும் இந்தியாவின் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். வலுவுள்ள ஆதாரம் எதுவும் இல்லாமல் இது போன்று குற்றச்சாட்டை கூறுவது நியாயமற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், இது போன்ற அடிப்படையில்லாத குற்றச்சாட்டுகளால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று அவர் மேலும் கூறினார்.
எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டைக் கூறுவது முக்கியமாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வேளையில் கூறுவது புத்திசாலித்தனமாகது என்றும் சவுத்ரி அகமது முக்தார் கூறியுள்ளார்.
இந்திய அதிகாரிகளின் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தானின் தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மானும் மறுத்துள்ளார்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் அருகே கடந்த 7ம் தேதி நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 இந்தியர்கள் உள்பட 28 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.