இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 14 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 32 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியாவில் உள்ள பாலமோட்டையில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது நேற்று பிற்பகல் 12.40 மணியளவில் சிறிலங்கப் படையினர் கடும் தாக்குதல் நடத்தினர்.
படையினர் இந்த முன்நகர்வு முயற்சியை எதிர்த்து விடுதலைப் புலிகளும் கடும் எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இம்மோதலில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 படையினர் படுகாயமடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ராணுவப் பேச்சாளர் ராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
வன்னியில் கடும் மோதல்!
இதேபோல வன்னியில் உள்ள நாயாற்று வெளிப்பகுதியில் இருந்து பள்ளமடு நோக்கி நேற்று காலை 6 மணியளவில் முன்நகர்ந்த சிறிலங்கப் படையினரின் மீது விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கூராய் குளக்கட்டுப்பகுதியிலிருந்து சிறாட்டிக்குளம் நோக்கி முன்நகர்ந்த படையினர் மீதும் விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தினர்.
சுமார் 5 மணிநேரம் வரை நீடித்த இந்த மோதல்களில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 15-க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
நட்டாங்கண்டல் பகுதியில் நடந்த மோதலில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 10-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்று இளந்திரையன் தெரிவித்தார் என்று புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.