இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஜி-8 எனப்படும் வளர்ச்சியடைந்த நாடுகள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஜப்பானின் டொயோகோ நகரில் ஜி-8 மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "பன்னாட்டு அணு சக்தி முகமை, அணு சக்தி தொழில் நுட்ப வணிகக் குழு உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவின் அணு ஆயுதப் பரவல் தடுப்புக் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் நிலையில், இந்தியாவுடன் நாங்களும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிப்போம்.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் எரிசக்தித் தேவைகள் பூர்த்தியாவதுடன், உலகளவில் அணு ஆயுதப் பரவல் தடை மண்டலங்களை ஊக்குவிக்கவும் அந்த ஒப்பந்தம் உதவும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் அவசியமானது என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்-சும் கூறிய சிறிது நேரத்தில் ஜி-8 நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜி-8 நாடுகள் குழுவில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.