கிரீன் ஹவுஸ் வாயுக்கள் வெளியேற்றம் தொடர்பாக வளரும் நாடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வளர்ந்த நாடுகள் முயற்சிக்கக் கூடாது என்றும், அவ்வாறு விதித்தால் அது வளரும் நாடுகளின் தொழில் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் இந்தியா கூறியுள்ளது.
ஜி-8 மாநாட்டில் இன்று வானிலை மாற்றம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், கிரீன் ஹவுஸ் வாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் ஒப்புக்கொண்ட அளவை அடைவதில் வளர்ந்த நாடுகள் தோல்வி அடைந்துள்ளதைக் குறிப்பிட்டதுடன், இவ்விவகாரத்தை ஜி-8 நாடுகள் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"வளர்ந்த நாடுகளான நீங்கள் மாசு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தினால், வளரும் நாடுகளான நாங்கள் அதைப் பின்பற்றுவோம்" என்ற மன்மோகன் சிங், "வானிலை மாற்றம் என்பது அனைவருக்கும் பொதுவான பிரச்சனை. ஏற்கெனவே நெருக்கடிகளைச் சந்தித்துவரும் வளரும் நாடுகளின் மீது கட்டுப்பாடுகளை விதித்தால், அது அந்நாடுகளின் வளர்ச்சியை மேலும் பாதிக்கும். வளர்ந்த நாடுகள் முதலில் தாங்கள் வெளியேற்றும் மாசைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டும்" என்றார்.
இந்த விவாதத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோஷி, பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரெளன், ஜெர்மன் ஆட்சியாளர் ஏஞ்சலா மார்க்கெல் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.