இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்-சும் விவாதித்தனர்.
அதன் பிறகு, இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் மிக அவசியமானது என்று இருவரும் கூட்டாகக் கூறினர்.
மத்திய அரசிற்கான ஆதரவு விலக்கல் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் இடதுசாரிகள் கொடுப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, ஜப்பானில் ஜி-8 மாநாட்டு நிகழ்ச்சிகளின் இடையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்-சும் சந்தித்து அணு சக்தி ஒப்பந்தம் பற்றிப் பேசினர்.
அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து 50 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. பிறகு செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்த இருவரும் புன்னகையுடன் அமர்ந்திருந்தனர். செய்தியாளர்களின் கேள்விகளை அவர்கள் அனுமதிக்கவில்லை.
முதலில் பேசிய ஜார்ஜ் புஷ், "நாங்கள் அணு சக்கி ஒப்பந்தம் பற்றியும், அது இரண்டு நாடுகளுக்கும் எவ்வளவு அவசியமானது என்பது பற்றியும் பேசினோம்" என்றார்.
இந்தச் சந்திப்பை இரண்டு நண்பர்களுக்கு இடையிலான சந்திப்பு என்று குறிப்பிட்ட அவர், "பிரச்சனைகள், அவற்றைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகள், பரஸ்பர உதவி உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் நாங்கள் பேசினோம். நான் பிரதமர் மன்மோகன் சிங்கையும், இந்தியாவையும் மதிக்கிறேன்.
அணு சக்தி ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கும் எவ்வளவு அவசியமானது என்பதையும், அதை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் என்ன என்பது குறித்தும் நாங்கள் விவாதித்துள்ளோம்.
பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இந்தியாவிற்கு நண்பனாக உதவ அமெரிக்கா தயாராக உள்ளது. இரண்டு நாடுகளும் நல்ல நண்பர்களாக நீடிக்க வேண்டியது அவசியம்" என்றார்.
அமெரிக்க உறவு திருப்தியளிக்கிறது: மன்மோகன்!
அமெரிக்காவுடனான நல்லுறவு தனக்கு மிகவும் திருப்தியளிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
அணு சக்தி ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கும் மிகவும் அவசியமானது என்ற புஷ்சின் கருத்தை ஆமோதித்த அவர், "ஜூலை 2005 இல் அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது முதல் இந்திய- அமெரிக்க நல்லுறவுகள் வேகமாக வளர்ச்சியடைவது பற்றிய எனது மகிழ்ச்சியை ஜார்ஜ் புஷ்-சிடம் தெரிவித்தேன்" என்றார்.
வானிலை மாற்றம், ராணுவ உறவுகள், உலகப் பொருளாதாரச் சிக்கல்கள் என எல்லா விடயங்களிலும் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட மன்மோகன் சிங், இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார்.