அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையில் பேச்சு நடத்துவதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் பரிந்துரையை தொழில்மயமான 8 நாடுகள் குழு (G-8) இன்று ஆமோதித்துள்ளது.
"உலகளவிலான வளர்ச்சியை பாதிக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, குறிப்பாக எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு பற்றி நாங்கள் ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், அபாயகரமான அளவில் அதிகரித்து வரும் உலகளவிலான பணவீக்க அழுத்தத்தைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்" என்று ஜி-8 நாடுகளின் தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.
கச்சா சந்தையில் தட்டுப்பாட்டை நீக்க எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதுடன், சுத்திகரிப்புத் திறனையும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எரிசக்திப் பாதுகாப்பை அதிகரிக்கும் வழிகளில் ஒன்றாக, எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான பேச்சிற்கு உதவுவதற்காக புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் எரிசக்தித் திறன் சார்ந்த அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஜி-8 தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இந்தப் பரிந்துரையை நேற்று பிரதமர் மன்மோகன் சிங் எடுத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.