மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் அகழ்வதற்கான ஒப்பந்தத்தில் இன்று சிறிலங்கா அரசும் இந்தியாவின் கேய்ன் எண்ணெய் அகழ்வு நிலையமும் கையெழுத்திட்டுள்ளன.
சிறிலங்க அதிபர் மாளிகையில் இன்று காலை 11 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச முன்பு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் சிறிலங்காவின் எரிபொருள் வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசியும், கேய்ன் எண்ணெய் நிறுவனத் தலைவர் இந்திரஜித் பெனர்ஜியும் கையெழுத்திட்டுள்ளனர்.
மன்னாரில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதற்கான கட்டணமாக கேய்ன் நிறுவனத்திடம் இருந்து ரூ.1,120 கோடி ரூபாயை சிறிலங்கா அரசு வசூலித்துள்ளது.
அதைத் தவிர இன்று மேலும் ரூ.10 கோடியை சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் கேய்ன் நிறுவனத் தலைவர் இந்திரஜித் பெனர்ஜி ஒப்படைத்தார்.
மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் அகழ்விற்காக அடையாளம் காணப்பட்டுள்ள எட்டு வளையங்களில் 'பி' வளையம் கேய்ன் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 3,400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வளையத்தில் 200 முதல் 1,200 கிலோ மீட்டர் ஆழத்தில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்ள கேய்ன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், இப்பணிகள் அடுத்த ஆறு மாதங்களில் தொடங்கும் என்றும் சிறிலங்க அமைச்சர் பெளசி தெரிவித்ததாக புதினம் இணைய தளம் கூறுகிறது.