சீனாவுடன் நடத்தப்பட்ட சமீபத்திய பேச்சு குறித்து புத்த மதத் தலைவர் தலாய் லாமா அதிருப்தி அடைந்துள்ளதாக அவரின் சிறப்புப் பிரதிநிதிகள் இன்று தெரிவித்தனர்.
பேச்சைத் தொடர்வதில் சீன அரசு சுணக்கம் காட்டி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.
திபெத் விவகாரம் குறித்து சீன அரசிற்கும் தலாய் லாமாவின் சிறப்புப் பிரதிநிதிகளுக்கும் இடையில் அண்மையில் பீஜிங்கில் பேச்சு நடந்தது.
இது குறித்து தலாய் லாமாவின் பிரதிநிதிகள் லோடி கியாரி, கெல்சாங் கியால்ட்சென் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், சீனாவுடனான பேச்சு குறித்து தலாய் லாமா அதிருப்தி அடைந்துள்ளதாக கூறியுள்ளனர்.
"திபெத் விவகாரத்தைத் தீர்ப்பதில் சீனா உறுதியாக இல்லை, அது அவர்களுக்கு முக்கியமில்லை என்பதை எங்கள் தரப்பிடம் எடுத்துச் சொல்லுமாறு இப்பேச்சின் போது நாங்கள் எதிர்த் தரப்பினால் வலியுறுத்தப்பட்டோம்.
திபெத் விவகாரம் சர்வதேச அளவிலான பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், அதைத் தீர்ப்பதற்கு நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு சீனா ஒத்துழைக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் எங்கள் கருத்துக்களை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை" என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அடுத்த சுற்றுப் பேச்சுக்கள் அக்டோபர் மாதம் நடக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.