அண்மையில் சிறிலங்கப் படையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை என்று சிறிலங்கப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
சிறிலங்கப் படையினரின் தாக்குதல்களைக் கண்டித்தும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க மத்திய- மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சிறிலங்க அரசு இப்படிக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கப் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், "சிறிலங்கக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த இந்திய மீனவர்களை சிறிலங்கப் படையினர் அழைத்துச் சென்று கடுமையாகத் துன்புறுத்தியதாக அயல்நாட்டு ஊடகங்கள் சிலவற்றில் வெளியாகியுள்ள குற்றச்சாற்றுகளை சிறிலங்க அரசு வன்மையாக மறுக்கிறது" என்று கூறியுள்ளது.
ஜூலை 2 அன்று நள்ளிரவில் பாக் நீரிணைப்புப் பகுதியில் சுமார் 200 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 900க்கும் மேற்பட்ட மீனவர்களை சிறிலங்கக் கடற்படையினர் சுற்றி வளைத்து பிடித்துச் சென்றதுடன், மறுநாளே மீனவர்களை விடுவித்தனர்.
இந்நிலையில், சிறிலங்கக் கடற்படையினர் தங்களை மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தியதாக விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்ததையடுத்து, பாக் நீரிணைப்புப் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால் சிறிலங்கா விடுத்துள்ள அறிக்கையில், மீனவர்களின் படகுகளைத் தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்துகின்றனர் என்று கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில், 289 மீனவர்களை மட்டுமே சோதனையிட்டதாகக் கூறியுள்ளது.
"ஜூலை 2 அன்று மன்னார் அருகில் உள்ள வெடித்தல் தீவுப் பகுதியில் சுமார் 300 இந்திய மீனவர்கள் உள்ளது தலைமன்னாரில் உள்ள சிறிலங்க ராடார்கள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சிறிலங்கக் கடற்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பிறகு மீனவர்கள் அனைவரும் அவர்களின் படகுகளுடன் விடுவிக்கப்பட்டனர். இந்நடவடிக்கையில் எந்தவிதமான வன்முறைகளும் இடம்பெறவில்லை. மீனவர்கள் அனைவரும் மனிதாபிமான முறையில் நடத்தப்பட்டனர்" என்று சிறிலங்கா கூறியுள்ளது.