அறிவுவளம் குன்றியவர்களுக்கான அமெரிக்க அதிபர் குழுவின் உறுப்பினராக மூத்த அமெரிக்க- இந்தியச் சமூகத் தலைவர் சாம்பு என் பானிக்கை அதிபர் ஜார்ஜ் புஷ் நியமித்துள்ளார்.
பெளவி மாகாணப் பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் கலந்தாய்வுத் துறை பேராசிரியராகப் பணியாற்றி வரும் சாம்பு என் பானிக், அறிவுவளம் குன்றியவர்களுக்கான சேவைத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார்.
அதிபர் நியமித்துள்ள குழுவில் உள்ள உறுப்பினர்கள், அறிவுவளம் குன்றியவர்கள் தொடர்புடைய கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் அதிபருக்கு ஆலோசனைகள் வழங்குவர்.
வாஷிங்டனில் குடும்ப நலக் கலந்தாய்வு மையம் ஒன்றினை நடத்தி வரும் பானிக், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெளவி பல்கலைக்கழகத்தில் சிறந்த பேராசிரியராக மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த பானிக், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் மற்றும் முதுகலை அறிவியல் பட்டங்களைப் பெற்றார். பின்னர் இங்கிலாந்து பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.