Publish Date: Tue, 01 Jul 2008 (13:42 IST)
Updated Date: Tue, 01 Jul 2008 (13:41 IST)
ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் இந்த ஆண்டு இறுதிக்குள் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க ராணுவத் தலைமையிடமான பென்டகன் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்கா மட்டுமல்லாது உலக நாடுகளுக்கே அது பெரும் ஆபத்தை விளைவிப்பதாய் அமையும் என்று மூத்த பென்டகன் அதிகாரி அச்சம் வெளியிட்டுள்ளதாக தொலைக்காட்சி செய்தி அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
அதாவது இஸ்ரேல், ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தினால், ஈராக், பெர்சிய வளைகுடா ஆகிய பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஈரானின் நாடான்ஸ் அணு உலை அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான அதிகபட்ச யுரேனியத்தை உற்பத்தி செய்கிறது. இதன் மீது 2009ஆம் ஆண்டில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்க இஸ்ரேல் உளவுத்துறை கணித்துள்ளது.
மேலும் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ளதால், அடுத்த புதிய அதிபர் பொறுப்பேற்பதற்குள் இந்த தாக்குதலை நடத்தலாம் என்றும் பென்டகன் கவலை வெளியிட்டுள்ளதாக அந்த தொலைக்காட்சி செய்தி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.