பாகிஸ்தானில் மதக் குழுக்களின் தலைமையிடங்கள் நிறைந்துள்ள கைபர் ஏஜென்சி பகுதியில் ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 9 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் படைகள் கடுமையான தாக்குதலை மேற்கொண்ட கைபர் ஏஜென்சியில் உள்ள பாரா என்ற இடத்தில் உள்ள அமர் பில் மரூஃப் வா நஹி அனீல்முன்கார் என்ற அமைப்பின் தலைமையகத்தின் மீது சுமார் 3 ஏவுகணைகள் விழுந்து வெடித்துள்ளன.
இத்தாக்குதல் ஹஜி நம்தார் என்ற மதத் தலைவரைக் குறிவைத்து நடத்தப்பட்டிருக்கலாம் என்றும், ஆனால் அவர் பாதுகாப்பாக உள்ளதாகவும் தாக்குதலைக் கண்டவர்கள் தெரிவித்ததாக தொலைக்காட்சிகள் கூறுகின்றன.
6 முதல் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கலாம் என்றும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் இதில் பலர் நம்தாரின் நெருங்கிய உறவினர்கள் என்றும் தொலைக்காட்சிகள் கூறுகின்றன.
மேலும், ஆஃப்கானிஸ்தானில் இருந்து இயங்கி வரும் அமெரிக்கப் படைகள்தான் ஆளில்லா விமானம் மூலமாக இத்தகைய தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் தாக்குதலைக் கண்டவர்கள் கூறியுள்ளனர்.