தமிழகத்தில் இறுதிக் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குத் தேவையான அணு எரிபொருள் வழங்கும் பணிகளை பூர்த்தி செய்து விட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
''ஒப்பந்த விதிகள் மற்றும் சர்வதேச அணுசக்தி முகமையின் விதிமுறைகளுக்கு முழுமையாக உட்பட்டு, 4.1 விழுக்காடு யுரேனியம்- 235 க்கு மிகைப்படாத அணு எரிபொருள் தண்டுகளை இந்தியாவிற்கு வழங்கியாகி விட்டது.
இந்த எரிபொருள் ஒரு உலையை முழுமையாகச் செயல்படுத்துவதற்கும், ஒரு ஆண்டிற்குப் பிறகு அதை புதுப்பிப்பதற்கும் போதுமானது ஆகும்'' என்று ரஷ்ய அணு எரிபொருள் கழகத்தின் இணைய தளம் தெரிவிக்கிறது.
இந்த எரிபொருளுடன் மொத்தம் 2,000 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணு உலைகளையும் ரஷ்யா வழங்கியுள்ளது.
ஏற்கெனவே கூடங்குளத்திற்குத் தேவையான 83 விழுக்காடு உபகரணங்களை ஒப்பந்தப்படி ரஷ்யா வழங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.
ஆக்கபூர்வமான அணுத் தொழில்நுட்பங்களை பரிமாற்றுதல் தொடர்பாக இந்தியா மீது அணு எரிபொருள் வழங்கு நாடுகள் குழு (என்.எஸ்.ஜி) விதித்துள்ள தடை நீக்கப்பட்ட பிறகு இன்னும் 4 அணு உலைகளை அமைப்பது தொடர்பாக இந்தியாவும் ரஷ்யாவும் ஒப்பந்தம் செய்துள்ளன.