அணுசக்தி உடன்பாட்டிற்குத் தடையாக உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளை இந்திய அரசு தீர்த்துவிடும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நெருக்கடிகள் தீர்ந்தால்தான் அணுசக்தி உடன்பாட்டை அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்க முடியும் என்று அமெரிக்காவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆக்கெர்மேன் கூறியுள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளில், குறிப்பாகக் கடந்த 3 ஆண்டுகளில் இருதரப்பு நல்லுறவின் மூலம் கிடைத்த பலன்களை அவசியமின்றித் தூக்கி எறிவது முட்டாள்தனம் என்று கூறிய அவர், அணுசக்தி உடன்பாட்டை நடைமுறைப்படுத்தும் 123 ஒப்பந்தத்தை தான் வலிமையாக ஆதரிப்பதாகக் கூறினார்.
"2005 ஜூலை மாதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷூம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அணுசக்தி ஒத்துழைப்பு மற்றும் 123 ஒப்பந்தம் ஆகியவற்றைத் தவிர இருதரப்பு நல்லுறவுக்கான நிறைய விடயங்கள் உள்ளன.
அணுசக்தி உடன்பாட்டைத் தூக்கி எறிவதன் மூலம் நல்லுறவுக்கான வேறு பல விடயங்களையும் நிராகரிப்பது முட்டாள்தனம்" என்றார் ஆக்கெர்மேன்.