பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவான அமைதிக் குழுவைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவர்கள் 28 பேரை தாலிபான்கள் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு அமைத்திருந்த அமைதிக் குழுவில் இருந்த பிட்டானி பழங்குடியினத் தலைவர்கள் 30 பேரை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டாங்க் மாவட்டத்தில் உள்ள ஜன்டோலா பகுதியில் இருந்து பைதுல்லா மெஹ்சூத் தலைமையிலான தெஹ்ரிக்-இ தாலிபான் பாகிஸ்தான் இயக்கத்தினர் கடத்திச் சென்றனர்.
கடத்தப்பட்ட பழங்குடியினத்தவர் அனைவரும், பைதுல்லா மெஹ்சூத் வலுவாக உள்ள வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியினர் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினருக்கு உதவியதால் பழங்குடியினத்தவரைக் கடத்தியதாக தாலிபான்கள் அறிவித்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு, கடத்தப்பட்டவர்களில் 28 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட பழங்குடியினத்தவரின் உடல்கள் இன்று காலை கரிவாம் கிராமத்தில் உள்ள சந்தையில் கிடந்தது. இதனால் வடக்கு வசிரிஸ்தான் ஏஜென்சி பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
22 உடல்களே மீட்கப்பட்டதாகக் காவல்துறையினரும், 28 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக பிட்டானி பழங்குடியினத்தவரும் கூறியுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளது.