அணுசக்தி உடன்பாட்டை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவது குறித்துக் கவலை தெரிவித்துள்ள அமெரிக்கா, தாமதமாகும் ஒவ்வொரு நாளும் நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும் என்று எச்சரித்துள்ளது.
"காலம் கடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாள் கழியும் போதும், நாடாளுமன்றத்தில் அணுசக்தி உடன்பாட்டைச் சமர்ப்பிதற்கான நெருக்கடி அதிகரிக்கிறது. எனவே இந்தத் தாமதம் நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்" என்று அமெரிக்க அயலுறவுப் பேச்சாளர் டாம் கேசே கூறினார்.
இந்த உடன்பாடு இந்தியா, அமெரிக்கா மற்றும் சர்வதேசச் சமூகத்தின் நலன் கருதி நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"இந்திய அரசிற்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். அதே நேரத்தில் எங்கள் நாடாளுமன்றத்தில் அணுசக்தி உடன்பாட்டை சமர்ப்பிப்பதற்கான காலம் நெருங்க நெருங்க நிலைமை மேலும் சிக்கலாகும்" என்று அவர் கூறினார்.