பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த கடும் மோதலில் தாலிபான் தளபதி உள்பட 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் பழங்குடியினர் பகுதிகளில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை முறியடிக்கும் வகையில் பாகிஸ்தான் படையினர் நடத்திய எதிர்த் தாக்குதலில் தாலிபான் தளபதி கான் அகா கொல்லப்பட்டதுடன் அவனுடனிருந்த இரண்டு தாலிபான்கள் படுகாயமடைந்தனர்.
மட்டா துணை மாவட்டத்தில் உள்ள கம்பட் என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து தாக்குதல் தாலிபான்கள் தீட்டிய திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து உள்ளூர் தாலிபான் பேச்சாளர் முஸ்லிம் கான் கூறுகையில், இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் இரண்டு தாலிபான் குழுக்களிடையில் நடந்த மோதலில் 12 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்தனர்.
துர்கிஸ்தானைச் சேர்ந்த மிர்பாஸ் கான் குழுவை பாகிஸ்தானைச் சேர்ந்த பைதுல்லா மெஹ்சூதின் தெஹ்ரிக்- இ தாலிபான் குழுவினர் தாக்கியதை அடுத்து மோதல் வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர பகுதி தன்னாட்சி பெற்ற மாகாணமான ஆரூக்கஸி ஏஜென்ஸி பகுதியில், கடந்த மாதம் கடத்தப்பட்ட 6 பேர் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.