பயங்கரவாதிகளின் நிதிப் பறிமாற்றம் மற்றும் நிதி மோசடிகளை முறியடித்தல், புலனாய்வுத் தகவல்களை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது என்று இந்தியாவும் ஆஸ்ட்ரேலியாவும் தீர்மானித்துள்ளன.
ஆஸ்ட்ரேலியத் தலைநகர் கேன்பெராவில் இன்று அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஸ்டீஃபன் ஸ்மித், இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு இடையில் நடந்த சந்திப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுத ஒழிப்பு மற்றும் அவற்றின் பரவலைத் தடை செய்யும் நடவடிக்கைகளுக்கு தங்களது வலுவான ஆதரவைத் தெரிவிப்பது, பாதுகாப்புப் படை மட்டத்திலான பேச்சிற்கு நிரந்தரப் பிரதிநிதிகளை நியமிக்கும் முடிவிற்கு வரவேற்பளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
"குடியேற்றம் மற்றும் பயங்கரவாத முறியடிப்பு ஆகியவற்றின் மீதான கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்த கூட்டத்தை இந்த ஆண்டு டெல்லியில் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. பணமோசடி மற்றும் பயங்கரவாதிகளின் நிதிப் பறிமாற்றத்தை முறியடித்தல், புலனாய்வு விடயங்கள் ஒருங்கிணைப்பு ஆகியவ்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது." என்று கூட்டறிக்கையில் தெரிவிக்ப்பட்டுள்ளது.