பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர் ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார்.
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் கராச்சியில் உள்ள லந்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பகவான் தாஸ் என்ற இந்திய மீனவர் இன்று காலை மின்சாரம் தாக்கி இறந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறையில் உள்ள மற்ற கைதிகளோடு துணி துவைக்கப் போன பகவான் தாசை மின்சாரம் தாக்கியதாக அச்செய்திகள் கூறியுள்ளன.
இதுகுறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மனித உரிமை ஆர்வலரும், பாகிஸ்தானின் முன்னாள் மனித உரிமைகள் அமைச்சருமான அன்சார் புர்னி, "மர்மமான சூழ்நிலைகளில் தாஸ் இறந்துள்ளதால், உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
"இறந்துள்ளவர் ஒரு கைதி. ஒரு கைதி மின்சாரம் தாக்கி இறந்தார் என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது. மின்சாரச் சாதனங்களைப் பயன்படுத்தும் அளவிற்கு அவர் ஒன்றும் அவரது வீட்டிலோ அல்லது பணியிடத்திலோ இல்லை.
இதனால், உண்மையிலேயே என்ன நடந்தது என்பதைக் கண்டறிய உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார் புர்னி.
தாஸ் உண்மையில் எப்போது கைது செய்யப்பட்டார் என்ற விவரம் அதிகாரிகளிடம் இல்லை.