இலங்கை வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் 18 படையினர் கொல்லப்பட்டதுடன், 31 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக விடுதலைப் புலிகளின் ராணுவப் பேச்சாளர் ராசையா இளந்திரையன் கூறுகையில், "பாலமோட்டையில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் சிறிலங்கப் படையினர் மூன்று முனைகளில் இருந்து தாக்குதல் நடத்தத் துவங்கினர்.
இதில் இரண்டு முனைகளில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் 7.00 மணியவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. ஒரு முனையிலான மோதல் மட்டும் பிற்பகல் 3.45 மணி வரை நீடித்தது.
விடுதலைப் புலிகள் நடத்திய இம்முறியடிப்புத் தாக்குதல்களில் 18 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 31 பேர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் 3 உடல்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்" என்று தெரிவித்ததாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.