மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஆஸ்ட்ரேலியப் பயணத்தின் போது, குற்றவாளிகள் பரிமாற்றம் தொடர்பான இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தாக உள்ளது.
எரிசக்தி மற்றும் தனிமத் துறையில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சு நடத்துவதற்காக, மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இரவு ஆஸ்ட்ரேலியா செல்கிறார்.
ஆஸ்ட்ரேலிய தலைநகர் கேன்பெராவில் நாளை அந்நாட்டு பிரதமர் கெவின் ரூட் மற்றும் அயலுறவு அமைச்சர் ஸ்டீஃபன் ஸ்மித் ஆகியோரைச் சந்திக்கும் அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இருதரப்பு நல்லுறவு பற்றிய இரண்டாம் கட்டப் பேச்சில் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரஸ்பரம் குற்றவாளிகளை பரிமாற்றிக் கொள்ளுதல், குற்ற வழக்குகளில் பரஸ்பரம் சட்ட உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட இரண்டு ஒப்பந்தங்களும் நாளை கையெழுத்தாகும் என்று கருதப்படுவதாக ஆஸ்ட்ரேலியாவிற்கான இந்தியத் துணைத் தூதர் வினோத் குமார் தெரிவித்தார்.