பாகிஸ்தானில் கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள எல்லா மரண தண்டனைகளையும் ஆயுள் தண்டனைகளாகக் குறைக்க வேண்டும் என்று அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பிற்கு அந்நாட்டு பிரதமர் யூசுப் ரஷா கிலானி பரிந்துரை செய்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்பரிந்துரையை பிரதமர் கிலானி வழங்கியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இப்பரிந்துரைக்கு அதிபர் முஷாரஃப் ஒப்புதல் அளிப்பார் என்றும், இதன்மூலம் பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியரான சரப்ஜித் சிங் விடுதலை ஆவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகவல்களை உறுதி செய்துள்ள பாகிஸ்தானின் மனித உரிமைகள் துறை முன்னாள் அமைச்சர் அன்சார் புர்னி, பாகிஸ்தான் சிறையில் உள்ள சரப்ஜித் சிங் மற்றும் கிர்பால் சிங் ஆகிய இரண்டு இந்தியர்களின் மரண தண்டனையும் ரத்தாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பாகிஸ்தானின் லாகூர், முல்டான் நகரங்களில் 14 பேர் பலியான 1990 ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் சரப்ஜித் சிங்கை விடுவிக்க வேண்டும் என்று இந்திய அரசு, மனித உரிமை அமைப்புகள், அவரின் குடும்பத்தினர் ஆகியோர் வரிசையாக பாகிஸ்தான் அரசிடம் முறையிட்டனர்.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பிற்கு சரப்ஜித் சிங் அனுப்பியுள்ள கருணை மனுவில், எல்லையோர கிராமத்தில் வசித்து வந்த விவசாயி ஆன தன்னைத் தவறுதலாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
சரப்ஜித் சிங்கிற்கு இந்த ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது.