Publish Date: Sat, 21 Jun 2008 (13:44 IST)
Updated Date: Sat, 21 Jun 2008 (15:22 IST)
சிறிலங்கக் கடற்படைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 16 முதல் 20 வயதிற்குட்பட்ட 15 இளைஞர்கள் யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள நெடுந்தீவு முகாமில் மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டது கடந்த திங்களன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடுமையான, தனிமை மிகுந்த பயிற்சியினால் மனமுடைந்த அவர்கள் மொத்தமாகத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிப்பதாகத் தமிழ்நெட் இணைய தளம் தெரிவிக்கிறது.
இச்சம்பவத்திற்கு முன்பு பயிற்சியாளர்கள் அனைவரும் தங்களின் மன உளைச்சலைத் தெவித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தெற்கு சிறிலங்காவில் ஏதோ ஒரு இடத்தில் பயிற்சி என்று கூறப்பட்ட நிலையில், நெடுந்தீவிற்கு அழைத்து வரப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
திங்களன்று இரவு சிறிலங்கக் கடற்படைத் தளத்தில் துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டுள்ளன.
பலியானவர்களின் உடல்கள் செவ்வாய்க் கிழமை அதிகாலை படகுகளில் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் இது தொடர்பாக நீதி விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை.