உலகின் மக்கள் தொகை 2012இல் 700 கோடியாக உயரும் என்றும், அப்போது இயற்கை வளங்கள் பற்றாக்குறை உருவாகி உலக நாடுகள் பரிதவிக்க நேரிடும் என்றும் அமெரிக்க அரசின் ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை அறிக்கையின்படி இன்று உலகின் மக்கள் தொகை 670 கோடி ஆகும். இதில் சீனா, இந்தியாவை அடுத்து அமெரிக்கா 30.4 கோடி மக்கள் தொகையுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
1800 ஆம் ஆண்டு வரை உலகின் மக்கள் தொகை 10 கோடி கூட இல்லை. 1999 ஆண்டு நிலவரப்படி உலகின் மக்கள் தொகை 600 கோடியாக அதிகரித்திருந்தது. முதலில் மக்கள் தொகையில் 10 கோடி அதிகரிக்க 13 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த வளர்ச்சி வேகமாக அதிகரித்துள்ளது.
வளரும் நாடுகளின் வேகமான மக்கள் தொகை வளர்ச்சியே உலகின் மக்கள் தொகை அதிகரிக்கக் காரணம் என்று அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி ஹாப் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வளரும் நாடுகளில் மருத்துவ வசதிகளும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளும் தாராளமாகக் கிடைத்த காரணத்தினால் மக்கள் தொகை வளர்ச்சி சாத்தியப்பட்டுள்ளது.
இருந்தாலும் பெண்கள் பள்ளிகள் மற்றும் பணிகளுக்குச் செல்வது மெல்ல மெல்ல அதிகரித்ததால் மக்கள் தொகை வளர்ச்சியும் சிறிது மட்டுப்பட்டது. பெரும்பாலான நாடுகளில் இந்நிலை இருந்தாலும், இன்னும் சில நாடுகளில் வேகமான மக்கள் தொகை வளர்ச்சி நீடிக்கிறது.
தற்போது ஆண்டிற்கு 1.2 விழுக்காடாக உள்ள மக்கள் தொகை வளர்ச்சி, 2050 ஆம் ஆண்டு வாக்கில் 0.5 விழுக்காடாகக் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
உலகில் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு என்ற சீனாவின் பட்டத்தை இந்தியா விரைவில் கைப்பற்றி விடும் என்றும் அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.