ஈரானுடன் பேசுவதற்கு நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம், எங்களுக்கு நிரந்தர எதிரிகள் தேவையில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
பேச்சு நடத்த விரும்பினால் குறைந்த காலத்திற்காவது யுரேனியம் செறிவூட்டல் பணிகளை ஈரான் நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நியூயார்க்கில் அயலுறவுக் கவுன்சிலில் பேசிய அந்நாட்டின் அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், "அமெரிக்காவிற்கு நிரந்தர எதிரிகள் தேவையில்லை, எங்களுக்கு நிரந்தரமான நண்பர்கள்தான் உள்ளனர்" என்றார்.
ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டல் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்காவது நிறுத்தி வைப்பது தொடர்பாக, அந்நாட்டின் பிரதிநிதிகளை எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் சந்தித்துப் பேசத்தயார் என்றும் ரைஸ் தெரிவித்தார்.
ஆனால் ஈரான் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து ஈரான் மீது அழுத்தம் தரும் வகையில் பேசிய ரைஸ், பேச்சிற்கான வழிகள் இப்போதும் திறந்துள்ளன என்று குறிப்பிட்டார்.
ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டல் பணிகளை நிறுத்தி வைப்பதற்கான பரிசாக இந்த வாய்ப்பைக் கருத வேண்டும் என்றும் அவர் கூறியதாகத் தெரிகிறது.
அணுசக்தியை குடிமைப் பணிகளுக்குப் பயன்படுத்தப் போவதாக ஈரான் தெரிவித்துள்ளதை அந்நாட்டு மக்கள் நம்பக் கூடாது என்றும் காண்டலீசா ரைஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.