தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சு நடத்த சிறிலங்க அரசு தயாராக உள்ளது என்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், அவரது ஆலோசகருமான பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.
பேச்சிற்கு நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம். ஆனால் பேச்சு நடத்துவதற்குச் சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிடும்வரை மீண்டும் பேச்சு என்ற பேச்சிற்கே இடமில்லை என்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச நிபந்தனை விதித்துள்ளது குறித்துக் கேட்டதற்கு, என்னென்ன நிபந்தனைகள் என்பது பற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார் பசில்.
"தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள்தான் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் மட்டுமே தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள் என்பதை ஏற்க முடியாது. இது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதற்காகத் தமிழர்களிடம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவே இல்லையென்றும், செல்வாக்கே இல்லையென்றும் நான் சொல்லவில்லை. அவர்களுக்கென்று குறிப்பிட்ட செல்வாக்கு உள்ளது.
ஆனால் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை. அரசு எப்போதும் பேச்சின் மூலம் தீர்வு காணவே விரும்புகிறது" என்றார் அவர்.
2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் சிறிலங்க அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் 6 சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒருதலையாக சிறிலங்க அரசினால் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து இப்பேச்சுக்கள் தடைபட்டன.
இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து போர் நிறுத்தத்தைக் கடைபிடிக்கப் போவதாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளதை அரசு ஏற்றுக்கொள்ளுமா என்று கேட்டதற்கு, இதுபற்றி முடிவு செய்ய கால அவகாசம் தேவை என்றார் பசில்.
ஒரே நாளில் இதை முடிவு செய்துவிட முடியாது. அனைத்தையும் யோசித்துதான் முடிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சிற்குத் தயாராக உள்ள அதேவேளையில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதோடு பயங்கரவாதமும் ஒடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் தேர்தல் மூலம் அரசு தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றிக் கூறுகையில், தங்கள் மாகாணத்திற்கு யார் தேவை என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார் பசில்.