வளர்ந்து வரும் ஜனநாயகச் சக்தியான இந்தியாவுடனான அமெரிக்க நல்லுறவில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலிசா ரைஸ் கூறியுள்ளார்.
தெற்காசிய நாடுகளுடனான நல்லுறவை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்துவதில் ஜார்ஜ் புஷ் அரசு மிகவும் ஆர்வமுடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வாஷிங்டனில் ஹெரிட்டேஜ் ஃபவுண்டேசன் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "புதிதான ஜனநாயகப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ள ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் பாதுகாப்பு உறவுகள் வலுப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் ஜனநாயகச் சக்தியான இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜார்ஜ் புஷ் தலைமையிலான குடியருக் கட்சியின் ஆட்சியின் கீழ் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
துவக்கத்தில் தைவான் பகுதிகளில் பதற்றம் அதிகரித்தது. அமெரிக்க- சீன உறவுகளில் பலவீனம் ஏற்பட்டது. காஷ்மீர் பிரச்சனைகளால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் மோதல்கள் வலுத்தன. ஆஃப்கனில் உள்ள தோல்வியடைந்த அரசினால் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்தன. வடகொரியா தனது அணு ஆயுதத் திட்டங்களை வலுப்படுத்தியது.
இந்த நடவடிக்கைகள் ஆசியா முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தெற்காசியாவில். இப்பதற்றத்தைத் தடுக்க அமெரிக்கா நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன" என்றார் ரைஸ்.