உலகளவில் 20 வங்கிகளில் 680 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடி செய்யப்பட்டதற்கு மூலகாரணமாக இருந்த இந்திய வம்சாவழியினர் ஒருவருக்கு 7 மாதங்கள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அலைடு டீல்ஸ் இன்கார்ப்பரேட் என்ற தனிம வர்த்தக நிறுவனத்தின் முன்னாள் முதன்மை நிதி அதிகாரியான அனில் ஆனந்த் என்ற அந்த நபர், இழப்பீடாக 683.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மோசடிக் குற்றங்களின் அடிப்படையில் கடந்த 2002 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஆனந்த் (46), குறைந்தது 30 ஆண்டுகள் சிறை தண்டனை பெற வேண்டியவர். விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததுடன், 15 குற்றவாளிகளைக் கைது செய்வதற்குக் காரணமாக இருந்ததால் ஆனந்திற்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மோசடிக்குள்ளான வங்கிகள், அமெரிக்க, ஐரோப்பா, ஆசியக் கண்டங்களில் உள்ள ஜெபி மோர்கன் சேஸ் அண்ட் கோ, ஃபிலீட் தேசிய வங்கி, பி.என்.சி. வங்கி, டிரெஸ்ட்னெர் வங்கி, லத்தீன் அமெரிக்கா ஏஜி, சீனா டிரஸ்ட் வங்கி, ஹைபோ வெரின்ஸ் வங்கி உள்ளிட்டவையாகும்.