பாகிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் உள்ள தாலிபான் தீவிரவாதிகள் ஆஃப்கனிற்கு அனுப்பப்பட்ட 3 அமெரிக்க ஹெலிகாப்டர்களை நடுவழியில் மறித்து கொள்ளை அடித்தனர்.
பாகங்கள் கழற்றப்பட்ட நிலையில் பெஷாவரிலிருந்து இந்த ஹெலிகாப்டர்கள் ஆஃப்கனில் உள்ள ஜலாலாபாத்திற்கு அனுப்பப்பட்டது. அப்போது ஆஃப்கன் - பாகிஸ்தான் எல்லையில் உள்ள தாலிபான் தீவிரவாதிகள் அந்த ஹெலிகாப்டர்களை கைப்பற்றியதாக தெரிகிறது.
இதில் ஒரு ஹெலிகாப்டரை அவர்கள் விற்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தை பாகிஸ்தான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஆனால் அமெரிக்க தரப்பு இந்த தகவலை ஒரு வதந்தி என்று மறுத்துள்ளது.
கராச்சி துறைமுகத்திலிருந்து இந்த ஹெலிகாப்டர்களின் பாகங்கள் கன்டெய்னர் லாரிகள் மூலம் பெஷாவருக்கு கொண்டுவரப்பட்டது. பிறகு இங்கிருந்து ஆஃப்கனிற்கு எடுத்துச் செல்லப்படுவதற்காக தீவிரவாதிகள் மிகுந்த பழங்குடியினர் பகுதிக்குள் நுழைந்துள்ளது.
அப்போது தாலிபான் தீவிரவாதிகள் வழிமறித்து இந்த ஹெலிகாப்டர்களை கொள்ளை அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனை பாகிஸ்தான் துணை ராணுவப்படை முறியடிக்கும் விதமாக தாலிபான்களுடன் சண்டைக்கு தயாராயினர். ஆனால் இருட்டினால் ராணுவத்தினருக்கு சேதம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.