இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நிறைவேற்ற தேவையான எல்லா முயற்சிகளையும் அடுத்த ஆண்டு ஜனவரி 20 வரை தாங்கள் மேற்கொள்ளத் தயார் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டிற்கு அவசியமான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் குறித்து சர்வதேச அணுசக்தி முகமையுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி இறுதிசெய்துள்ள விவரங்கள் பற்றி ஐ.மு.கூ.- இடதுசாரிகள் உயர்மட்டக் குழு இன்று விவாதிக்க உள்ள நிலையில் அமெரிக்கா இதை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு இணையமைச்சர் டாம் கேசே, "இந்தக் கணத்தில் இருந்து அடுத்த ஜனவரி 20 வரை அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நிறைவேற்றும் முயற்சிகளை நாங்கள் ஆதரிப்போம். இந்த உடன்பாட்டை அங்கீகரிப்பதற்காக இந்திய அரசை நாங்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்துவோம். இந்திய அரசு அங்கீகரித்தவுடன், எங்கள் நாடாளுமன்றத்தில் உடன்பாட்டிற்கு ஒப்புதல் பெற முயற்சிப்போம்" என்றார்.
"ஜனவரிக்குப் பிறகு அமெரிக்காவில் யார் ஆட்சிக்க வந்தாலும், அவர்கள் அமெரிக்காவின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த உடன்பாட்டை நிறைவேற்றத் தொடர்ந்து முயற்சிப்பார்கள் என்று அதிபர் ஜார்ஜ் புஷ் நம்புகிறார்" என்றும் அவர் கூறினார்.