தெற்கு சீன பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்திற்கு குறைந்தது 62 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக 9 மாகாணங்களிலிருந்து மக்கள் தங்கள் உடைமைகளை விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மழை வெள்ளத்திற்கு குவாங்டாங் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் மட்டும் 20 பேர் பலியானதாகவும், 17 நகரங்களில் உள்ள 57 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
குவாங்டாங்கில் உள்ள ஸீஜியாங் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் வீதிகளும், சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மழை மேலும் நீடித்தால் இதுவரை இல்லாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று சீன அரசுத் துறை அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே மே 12ஆம் தேதி பூகம்ப இழப்புகளிலிருந்தே இன்னமும் மீளாத நிலையில் அதே பகுதிகளில் தற்போது ஏற்பட்டு வரும் வெள்ளங்களால் மட்டும் 1.5 பில்லியன் டாலர் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 45,000 வீடுகள் அழிந்துள்ளன. மேலும் 140,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.