Newsworld News International 0806 14 1080614037_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க சவுதி அரேபியா முடிவு!

Advertiesment
கச்சா எண்ணெய் உற்பத்தி சவுதி அரேபியா
, சனி, 14 ஜூன் 2008 (14:24 IST)
உலக அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் அதிக அளவு உற்பத்தி செய்யும் நாடான சவுதி அரேபியா, கச்சா எண்ணெய் உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில், உள்நாட்டு பிரச்சனைகளால் தினசரி 20 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், ஊக வணிகம் நடப்பதாலும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த விலை உயர்வால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த நாடுகளில் அரசியல்-பொருளாதார ரீதியான பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளன.

இதை கருத்தில் கொண்டு ஜி-8 என்று அழைக்கப்படும் வளர்ந்த நாடுகளும், இந்தியா, சீனாவும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதை தடுக்க உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன.

தற்போது சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தியை அடுத்த மாதத்தில் இருந்து தினசரி 5 லட்சம் பீப்பாய் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த அதிகாரிகள், இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்கள், ஆய்வு நிபுணர்களிடம் விளக்கியதாக தெரிகிறது. தற்போது உற்பத்தி உயர்வையும் சேர்த்து, சவுதி அரேபியா இதுவரை இல்லாத வகையில் தினசரி 100 லட்சம் பீப்பாய் உற்பத்தி செய்யும் என்று நியுயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடியால் சவுதி அரேபியா கவலை அடைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது என நியுயார்க் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சவுதி அரேபியா தினசரி 94 லட்சத்து 50 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது (சென்ற மாதம் 3 லட்சம் பீப்பாய் அதிகப்படுத்தியது).

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதால், தற்போது இலாபம் கூடுதலாக கிடைத்தாலும், இதனால் பொருளாதார வளர்ச்சி மந்தமடையும். கச்சா எண்ணெய் தேவை குறைந்து விடும். இந்த நிலைமை ஏற்கனவே அமெரிக்காவிலும், மற்ற சில வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் கச்சா எண்ணெய் விலை உயர்வால், மற்ற எரிசக்தியின் விலை கட்டுப்படியாக கூடியதாக ஆகிவிடும். இது கச்சா எண்ணெய் வருவாயை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்திற்கு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் என்று சவுதி கருதுகிறது.

கச்சா உற்பத்தி அதிகரிக்கும் திட்டத்தை பல கச்சா எண்ணெய் வர்த்தக நிறுவனங்களிடமும், நிபுணர்களிடமும் ஆலோசனை நடத்தும் போது சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க நிறுவனங்களிடம் சமீபத்தில் தெரிவித்தாக நியுயார்க் டைம்ஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா விலை ஏற்றத்தை பற்றி விவாதிக்க, முக்கிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் மற்றும் பயன்படுத்தும் நாடுகளின் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டம் ஜட்டாவில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் கச்சா எணணெய் விலை உயர்வை தடுக்க முக்கியமான முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil