எதிர்ப்புகளை மீறி அணுசக்தி உடன்பாட்டை நடைமுறைப்படுத்த இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வலியுறுத்தியுள்ளார்.
"கடுமையான எதிர்ப்பையும் மீறி இந்திய அணுசக்தி உடன்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதிபர் ஜார்ஜ் புஷ் விரும்புகிறார்... ஏனெனில் இந்தியாவுடனான ராணுவ உறவுகள் நீண்ட காலத்திற்கு தொடர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். எனவே தற்போது இந்தியா எதிர்ப்புகளை மீற வேண்டும்" என்று அமெரிக்க பொருளாதார அமைச்சர் கார்லோஸ் கட்டிரெஷ் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் நடந்த அமெரிக்க இந்திய அமெரிக்க வர்த்தக கவுன்சிலின் 33 ஆவது ஆண்டு விழாவில் பேசிய அவர், "எரிபொருளுக்கான தேவை அதிகரித்து வருவதை நமது நாடுகள் மறுக்க முடியாது. எனவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி உடன்பாட்டின் அவசியத்தை உணர்ந்து அதை நடைமுறைப்படுத்த இந்தியா முயற்சிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியாவை சர்வதேச அணு ஆயுதப் பரவல் தடை முயற்சிகளில் பங்கேற்க வைப்போம்" என்றார்.
இந்தியாவிற்குப் போதுமான தூய்மையான எரிபொருளை வழங்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால், மாசற்ற எரிபொருள் தொழில்நுட்பத்தை நாம் ஏற்றுக்கொண்டதாகத்தான் அர்த்தம் என்றார் கார்லோஸ்.
இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத், அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக அரசியல் கட்சிகளிடையில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் இந்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக முன்னெறி வருகிறது. இம்முயற்சியில் விரைவில் வெற்றிபெற்று அணுசக்தி உடன்பாடு நிறைவேறும் என்று நான் நம்புகிறேன் என்றார்.