இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டு விடயத்தில் இந்தியாவை முவெடுக்க விடுங்கள் என்று அமெரிக்க அரசை அந்நாட்டு முன்னாள் அமைச்சர் ஹென்ரி கிஸ்சிங்கர் வலியுறுத்தியுள்ளார்.
வாஷிங்டனில் நடந்த இந்திய- அமெரிக்க வர்த்தக கவுன்சிலின் 33ஆவது ஆண்டு விழாவில் பேசிய அவர், "அணுசக்தி உடன்பாட்டை மேற்கொள்ளுமாறு இந்தியாவை ஊக்கப்படுத்துவதில் நானும் பங்கேற்கிறேன். இந்தியாவிற்கு எந்த விளக்கமும் தேவையில்லை. ஒவ்வொரு முடிவையும் தன்னிச்சையாக மேற்கொள்ளும் திறன் இந்தியாவிற்கு உள்ளது.
இந்தியாவை முடிவெடுக்க விடுங்கள். அந்த முடிவை வரவேற்போம். அது எதுவாக இருந்தாலும் இந்திய- அமெரிக்க உறவின் வலு குறையாது." என்றார்.
"இந்தியாவின் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய அவசியம் அந்நாட்டு அரசிற்கு உள்ளது. இந்தியாவிற்கான பிரத்யேகமான பிரச்சனைகளை தீர்த்த பிறகுதான் அந்நாட்டு அரசால் முடிவெடுக்க முடியும்" என்றும் கிஸ்சிங்கர் குறிப்பிட்டார்.
இவ்விழாவில் பேசிய அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் ரோனென் சென், இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டிற்கு உள்ள எதிர்ப்புகளைக் களைந்து தர்க்க ரீதியான முடிவு எட்டப்படும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.