உலகம் முழுதும் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 165 மில்லியன்களாக இருக்கும் அதே வேளையில், அவர்களில் 7 கோடியே 40 லட்சம் சிறுவர்கள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) தெரிவித்துள்ளது.5
வயது முதல் 14 வயது சிறுவர்கள் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அதாவது உற்பத்தி, சுரங்கம், கட்டுமானத் தொழில்கள் போன்ற உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்தான வேலைகளில் மட்டும் 7 கோடியே 40 லட்சம் சிறுவர்கள் ஈடுபட்டிருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறியுள்ளது.அதேபோல் உலகம் முழுதும் சுமார் 7 கோடியே 20 லட்சம் சிறுவர்கள் ஆரம்பக் கல்வி அளிக்கப்படாமல் கடுமையான பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.ஆப்ரிக்க கண்டத்தில் சஹாரா பாலைவனத்தை ஒட்டியுள்ள நாடுகளின் வறண்ட பகுதிகளில் மட்டும் 5 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 5 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், ஆசிய பசிபிக் பகுதியில் 5-14 வயது குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை 12 கோடியே 20 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.இந்த விஷயத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளும், மேற்கிந்திய தீவுகளும் முன்னேற்றம் கண்டுள்ளன. அதாவது இந்த நாடுகளில் 5-14 வயதுள்ள குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 5 விழுக்காடாக மட்டுமே உள்ளது.
இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்சனை என்பது குறித்து கொல்கத்தாவில் நேற்று, "குழந்தைகளைக் காப்போம்" என்ற அமைப்பின் மா நிலத் திட்ட மேலாளர் மனவேந்திர நாத் ரே என்பவர் கூறுகையில், 2001 கணக்கீட்டின் படி 5 முதல் 14 வயதுள்ள குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிகை 1 கோடியே 28 லட்சமாக இருந்தது என்றார்.
ஆனால் யூனிசெஃப் அமைப்பின் புள்ளி விவரங்களின் படி 29 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் 2001 கணக்கெடுப்பின் படி 90,000 குழந்தை தொழிலாளர்கள் இருந்தனர். ஆனால் குழந்தைகளைக் காப்போம் அமைப்பின் கணக்கெடுப்பின் படி கொல்கத்தாவில் மட்டும் 50,000 சிறுவர், சிறுமிகள் வீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
ஆனால் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் உலக அளவில் முடுக்கி விடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.