திபெத் விவகாரம் தொடர்பாக சீன அரசிற்கும் தனது பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சு அடுத்த மாதம் மீண்டும் துவங்கக் கூடும் என்று தான் எதிர்பார்ப்பதாக புத்த மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்தார்.
தியான உரைகளை வழங்குவதற்காக ஆஸ்ட்ரேலியா சென்றுள்ள தலாய் லாமா, அமைதியும் நிலைத்தன்மையும் இதயத்தில் இருந்து வர வேண்டுமே தவிர துப்பாக்கியில் இருந்தல்ல என்றார்.
திபெத்தில் நடக்கும் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு தங்களால் இடையூறு இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். "ஒலிம்பிக் போட்டிகளை நாங்கள் துவக்கத்தில் இருந்தே ஆதரித்து வருகிறோம், ஒலிம்பிக் சுடரும் அதில் ஒரு பகுதிதான் என்றார்" அவர்.
திபெத் தலைநகர் லாசாவில் கடந்த மார்ச் மாதம் நடந்த வன்முறைகளையடுத்து, மே மாத துவக்கத்தில் சீன அரசிற்கும் தலாய் லாமாவின் சிறப்புப் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சு நடந்தது. இதில் மீண்டும் கூடிப் பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கான தேதி முடிவு செய்யப்படவில்லை.