Publish Date: Thu, 12 Jun 2008 (13:39 IST)
Updated Date: Thu, 12 Jun 2008 (13:38 IST)
இலங்கை வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 19 படையினர் கொல்லப்பட்டதுடன் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியா மாவட்டம் குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது நேற்று (புதன்கிழமை) காலை 6.00 மணியளவில் சிறிலங்கப் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும், இம்முன்நகர்வு முயற்சியை முறியடிக்கும் வகையில் விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதல் நடத்தியதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 4 மணி வரை நடந்த கடுமையான மோதலில் 19 படையினர் கொல்லப்பட்டதுடன், 23க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக புதினம் இணைய தளம் கூறுகிறது.
இதற்கிடையில் இம்மோதலில் 13 விடுதலைப் புலிகளும் 2 படையினரும் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.