இலங்கை மன்னாரில் உள்ள சிறிலங்கக் கடற்படையினரின் கூட்டுப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புக் கமாண்டோ அணியினர் நடத்திய தாக்குதலில் 10 படையினர் கொல்லப்பட்டதுடன் எராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
மன்னார் தீவில் உள்ள எருக்கலம்பிட்டி சிறிலங்கக் கடற்படையினரின் கூட்டுப் படைத்தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புக் கமாண்டோ அணியினர் வெற்றிகரமாகத் தாக்கியழித்ததாக விடுதலைப் புலிகளின் ராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கூறியதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
"கடந்த மாதம் வீரச்சாவடைந்த கடற்புலிகளின் சிறப்பு இயந்திரப் பொறியாளர் லெப்.கர்ணல் கடாபி நினைவாக இன்று புதன்கிழமை அதிகாலை 2.08 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலில் தளம் 10 நிமிடத்தில் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்தது. இதில் படையினர் 10 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதனர்" என்று இளந்திரையன் கூறியதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
இத்தாக்குதலின்போது 50 கலிபர் துப்பாக்கிகள் 2, 81 மி.மீ. மோர்ட்டார்கள் 2, ராடார் 1 உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கடற்புலிகளால் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
4 கடற்புலிகள் பலி: சிறிலங்கப் படைத்தரப்பு!
இத்தாக்குதலில் 3 சிறிலங்க மாலுமிகளும் 3 தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளும் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.
"கிடைத்துள்ள தகவல்களின்படி கடற்புலிகளின் தலைவர் சிறிமாறன் உள்பட 4 கடற்புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். சிறிலங்கா தரப்பில் 3 மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்" என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் மன்னார் வளைகுடா பகுதியில் கடற்புலிகளின் படகுகள் மீது சிறிலங்க விமானப்படையின் எம்.ஐ.24 ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.
வடக்கு இலங்கையில் 4.45 மணிக்கு வெடித்தல்தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப்படை வட்டாரங்கள் கூறுகின்றன.