கடந்த மே மாதம் 12 ஆம் தேதி சீனாவில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தினால் உருவான தாங்கியாஷன் ஏரியிலிருந்து தண்ணீர் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டது என்று சீன அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
மே 12 ஆம் தேதி பூகம்பத்தினால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக நதிகளின் குறுக்கே பெரிய பாறைகளும் சேரும் சக்தியும் திரண்டு நதியின் போக்கை தடுத்து நிறுத்தின. இதில் உருவான 30 ஏரிகளில் தாங்கியாஷன் ஏரி மிகப்பெரியது.
இதில் நீர்வரத்து அதிகமாகி உடையும் அபாயம் ஏற்பட்டது. இதனால் சமவெளிகளில் வாழும் 2,50,000 பேர்களின் உயிருக்கு ஆபத்து நேரும் அபாயம் இருந்தது. ஆனால் அவர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு சீன அரசு ஏற்கனவே அனுப்பிவிட்டது.
ஏரியிலிருந்து தண்ணீரை வெளியேற்ற செயற்கைக் கால்வாய்கள் உருவாக்கப்பட்டன. நதியின் குறுக்கே தடுப்புச் சுவர் எழுப்பியிருந்த பாறைகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. இந்தப் பணியில் சீன ராணுவமும், காவல்துறையும் கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர்.
இதனால் ஏரியில் இருந்த 8.8 பில்லியன் கன அடி தண்ணீர் மாற்று வழிகளில் செலுத்தப்பட்டு ஏரியில் நீரின் அழுத்தம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அபாயம் வெற்றிகரமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது என்று சீன அரசு தெரிவித்துள்ளது.