உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கச்சா எண்ணெய் விலையேற்றம் நியாயமற்றது என்று உலக கச்சா உற்பத்தியில் முதலிடத்திலுள்ள செளதி அரேபியா கூறியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு பற்றி விவாதிப்பதற்காக எண்ணெய் உற்பத்தி நாடுகளும், பயன்படுத்தும் நாடுகளும் உடனடியாகக் கூட வேண்டும் என்றும் செளதி அரேபியா கோரிக்கை விடுத்துள்ளது.
கூடுதலான எரிபொருள் வினியோகத்தின் மூலம் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் பணியில், எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு (ஓபெக்) உடன் மற்ற பெரும் உற்பத்தியாளர்களும் இணைய வேண்டும் என்றும் செளதி அரேபியா வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச எண்ணெய் மாநாடு நடத்த வேண்டும் என்ற முடிவு மன்னர் அப்துல்லாவின் தலைமையில் ஜெடாவில் நடந்த சவுதி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
சந்தை நிலவரத்தையும் பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி பற்றிய உண்மை நிலையையும் வைத்துப் பார்க்கையில், தற்போதுள்ள எண்ணெய் விலைகள் நியாயமற்றது என்று கூறியுள்ள செளதி அமைச்சரவை, சந்தைக்குப் போதுமான வரத்து உள்ளது என்று கூறியுள்ளது.
எரிபொருள் வினியோகத்தை அதிகரிக்கும் பணியில் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு (ஓபெக்), மற்ற பெரும் உற்பத்தியாளர்கள் ஆகியோருடன் செளதி அரேபியா இணைந்து செயல்படும் என்று அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை அதிகளவில் பாதிப்பதுடன், உலகப் பொருளாதாரத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள, அசாதாரண நியாயமற்ற கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தடுக்கும் பணியில் செளதி எப்போதும் உறுதியாக இருக்கும் என்றும் அந்நாட்டு அமைச்சரவை கூறியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜப்பானின் அமோரியில் நடந்த கூட்டமொன்றில், எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கான அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது என்று ஜப்பான், சீனா, தென் கொரியா, இந்தியா மற்றும் ஜி8 நாடுகள் வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், உலகின் எண்ணெய்த் தேவையில் மூன்றில் ஒரு பங்கை உற்பத்தி செய்யும் ஓபெக் மீது எண்ணெய் வினியோகத்தை கூடுதலாக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது.