துருக்மேனிஸ்தானில் இருந்து ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வரும் இயற்கை எரிவாயு குழாய் அமைக்கப்பட உள்ளது. இந்த குழாய் பாதை அமையப்போகும் பகுதியில் தலிபான்களாலும், மற்ற பல தீவிரவாத அமைப்புகளாலும் கண்ணி வெடிகள் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ளன.
இந்த குழாய் அமையப்போகும் பகுதிகளில் உள்ள கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு வருகிறது. இரண்டு வருடங்களில் முழுமையாக அகற்றப்பட்டு விடும் என்று ஆப்கானிஸ்தான் கூறியதாக பாகிஸ்தான் பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
உலக அளவிலான குழாய் பாதை அமைக்கும் ஆலோசனை நிறுவனம் கூறியபடி, இயற்கை எரிவாயு குழாய், ஆஃப்கானிஸ்தானத்தில் ஹீராட், பராக், நிம்ரோஜ், ஹெல்மன்ட், கந்தகார் ஆகிய ஐந்து பிரதேசங்கள் வழியாக அமைக்கப்படுகிறது. இஙகிருந்து பாகிஸ்தானுக்கு குழாய் அமைக்கப்படும்.
இந்த குழாய் பாதை அமையும் பிரதேசங்களில் ஆஃப்கானிஸ்தான் அரசு 300 தொழிற்சாலைகளை அமைக்கப்போவதாகவும், கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்பட்ட பிறகு, மேலும் ஆயிரம் தொழிற்சாலைகளை அமைக்க உள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் தினசரியான டெய்லி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
துருக்கமேனிஸ்தான் அதனிடம் உள்ள இயற்கை எரிவாயு இருப்பு பற்றிய தகவல்களை, அடுத்த மாதத்திற்குள் சம்பந்தபட்ட அனைத்து தரப்பினரிடமும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடம் 80 பில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயு இருப்பில் உள்ளதாகவும், இதனை கொண்டு வருடம் முழுவதும் குழாய் பாதை வழியாக இயற்கை எரிவாயு அனுப்பமுடியும் என்றும் கூறிவருகின்றது.
இந்த குழாய் பாதை வழியாக வருடத்திற்கு குறைந்த பட்சம் 30 பில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயு வழங்க முடியும் என்று துருக்மெனிஸ்தான் அரசு, சம்பந்தப்பட்ட அரசுகளிடம் தெரிவித்துள்ளது.
ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு இயற்கை எரிவாயு கொண்டு வரும் திட்டத்தில், இயற்கை எரிவாயுவுக்கு நிர்ணயிக்கப்படும் விலையே, துருக்கமெனிஸ்தான் இயற்கை எரிவாயுவுக்கும் நிர்ணயிக்கப்படும். (இதன் விலை ஜப்பானுக்கான கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட உள்ளது).
உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்து உள்ளது. இதனால் துருக்மேனிஸ்தான்- ஆஃப்கானிஸ்தான் -பாகிஸ்தான்-இந்தியா இடையே இயற்கை எரிவாயு குழாய் அமைப்பதற்கான பேச்சுவார்த்தை மெதுவாக நடந்து வருவதாகவும், இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விலைகளே உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.