இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 35க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இலங்கையில் மன்னார், மணலாறு பகுதிகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது நேற்று அதிகாலை முதல் சிறிலங்கப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். படையினரின் முன்நகர்வு முயற்சிகளை கடும் எதிர்த்தாக்குதல் மூலம் விடுதலைப் புலிகள் தடுத்து வருகின்றனர்.
மனனார் மாவட்டத்தில் நேற்று காலை 10 மணி முதல் பெரியமடு, பாலம்பிட்டி, பெரியமடுக்குளம், இடதுகரை குளக்கட்டு ஆகிய நான்கு இடங்களில் இருந்து சிறிலங்கப் படையினர் முன்நகர்வு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் இதுவரை 20க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், மோதல் தொடர்ந்து நடந்து வருவதாகவும் புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
மணலாற்றில் கடும் மோதல்!
இதேபோல மணலாற்றில் கொக்குத்தொடுவாய், மண்கிண்டிமலை, நித்தியக்குளம் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் நேற்று காலை 6 மணி முதல் சிறிலங்கப் படையினர் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு எதிராக விடுதலைப் புலிகளும் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கொட்டும் மழையில் நடந்து வரும் இம்மோதலில் இதுவரை 15க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், 25க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்து உள்ளதாகவும், மோதல் இன்றும் தொடர்ந்து நடந்து வருவதாகவும் புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.