மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நான்கு நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றார். அந்நாட்டு அதிகாரிகளுடன் அவர் நடத்தும் பேச்சில் எல்லைச் சிக்கல், அரசியல் விவகாரங்கள் முக்கிய விடயங்களாக இடம்பெறும் என்று கருதப்படுகிறது.
சீன அயலுறவு அமைச்சர் யாங் ஜெய்ச்சி அழைப்பின் பேரில் சீனா சென்றுள்ள அமைச்சர் பிரணாப் முகர்ஜியை பீஜிங் விமான நிலையத்தில் சீனாவிற்கான இந்தியத் தூதர் நிருபமா சென் மற்றும் சீன அரசின் உயரதிகாரிகள் வரவேற்றனர்.
சீன அமைச்சர் யாங் ஜெய்ச்சியுடன் அமைச்சர் பிரணாப் முகர்ஜி நடத்தவுள்ள பேச்சில், எல்லைச் சிக்கல், அரசியல் விவகாரங்கள், வர்த்தகம், நீர்ப்பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் முக்கிய விடயங்களாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சீனப் பிரதமர் வென் ஜியாபோவையும் அவர் சந்திக்கிறார். கடந்த 2002 ஆம் ஆண்டு மத்திய அரசு பொறுப்பேற்றது முதல், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் முதல் சீனப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.