யாழ்ப்பாணம் அருகில் உள்ள எழுதுமட்டுவாள் சிறிலங்கப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக புலிகளின் ராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சி அருகில் உள்ள எழுதுமட்டுவாள் சிறிலங்கப் படைத்தளம் மற்றும் மோர்ட்டார் எறிகணைகளை ஏவும் தளம் ஆகியவற்றின் மீது இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
விடுதலைப் புலிகள் வீசிய எறிகணைகள் சிறிலங்கப் படைத்தளம், மோர்ட்டார் எறிகணை ஏவும் தளம், வெடிபொருள் கிடங்கு ஆகியவற்றின் மீது விழுந்து வெடித்தன.
சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் வெடிபொருள் கிடங்கு வெடித்துச் சிதறியது. அங்கிருந்து இன்று பிற்பகல் வரை வெடிச்சத்தம் கேட்டது.
இத்தாக்குதலில் படைத்தளத்தில் இருந்த படையினர் ஏராளமானோர் பலியானதாகத் தெரிகிறது.
மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்குப் படையினர் தயாரானபோது இந்த எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளோம்.
இவ்வாறு இராசையா இளந்திரையன் தெரிவித்ததாக புதினம் இணைய தளம் கூறுகிறது.