இலங்கையில் சிறிலங்கப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 2 சிறுவர்கள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
முல்லைத் தீவில் இருந்து கோவில் திருவிழாவுக்கு காரில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது மாங்குளத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு 8.40 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
மாங்குளத்திற்கும் கரிப்பட்டமுறிப்பிற்கும் இடையில் நடந்துள்ள இச்சம்பவத்தில், முல்லைத்தீவு, அம்பலவன்பொக்கணை, முள்ளி வாய்க்கால் பகுதிகளைச் சேர்ந்த பசுபதிப்பிள்ளை முருகதாஸ் (வயது 33), முருகதாசின் மகன் தனுஜன் (வயது 04), ஐயாத்துரை வசந்தகுமார் (வயது 30), தர்மலிங்கம் யோகேஸ்வரி (வயது 35), கணேசலிங்கம் கனிஸ்ரா (வயது 08), காத்தமுத்து நாகராசா (வயது 53) ஆகிய 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், கொல்லப்பட்ட முருகதாசின் மகன் ஜெனடி (வயது 10), முருகதாசின் மனைவி சித்திரா (வயது 26), வசந்தகுமார் சுஜிந்தன் (ஒன்றரை வயது), தர்மலிங்கம் ஜினோஜினி (வயது 16) ஆகிய 4 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் முல்லைத் தீவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.