அமெரிக்கப் படைகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில், ஐரோப்பிய பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடையவனும் அல் காய்டா இயக்கத்தின் பயிற்சியாளரும் வெடிகுண்டு நிபுணருமான அபு சுலேமான் அல்- ஜஷாரி என்பவன் கொல்லப்பட்டுள்ளான்.
அல்ஜீரியத் தீவிரவாதிகளுக்குப் பயிற்சியளித்து வந்த அவன், கடந்த மாதம் 14 பேர் கொல்லப்படக் காரணமான டமடோலா கிராமத்தில் நடந்த எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் தி நேஷன் நாளிதழ் தெரிவிக்கிறது.
தற்போது 45 வயதாகும் அல் ஜஷாரி அல் காய்டா இயக்கத்தின் அயலுறவுச் செயலக இயக்குநராகக் கருதப்பட்டவன். இவன் தனது கூட்டாளிகள் 15 பேருடன் ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது அமெரிக்கப் படைகளின் ஆளில்லா விமானம் வீசிய எறிகணை வெடித்ததில் கொல்லப்பட்டுள்ளான். தாக்குதல் நடந்த டமடோலா கிராமம் பாகிஸ்தானின் பஜார் பழங்குடியினர் பகுதியில் உள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான வீடு முன்னாள் ஆஃப்கன் தலிபான் பாதுகாப்பு அமைச்சர் மெளல்வி உபைதுல்லா உடையது என்று நம்பப்படுகிறது. அவரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் குழந்தைகளும் கூட இதில் பலியாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இத்தாக்குதல் குறித்து அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ. இயக்குநர் மைக்கேல் ஹைடன் கூறுகையில், ஆஃப்கன்- பாகிஸ்தான் எல்லையில் உள்ள பதுங்கு குழிகளில் இருந்தாலும் அல் காய்டாவின் முக்கியத் தலைவர்களைக் கண்டறிந்து கொல்லும் பணி தொடரும் என்றார்.